திங்கள், 4 ஜூன், 2012

வெள்ளி இடைமறிப்பு (Venus transit) - 2012 - காணத்தவறாதீர்!!

இந்த ஜூன் மாதம் உண்மையிலேயே அரிய மாதம் என்று சென்ற பதிவிலேயே சொல்லியிருந்தேன் அல்லவா? அது ஏன்?

ஜூன் 6 , 2012

இந்த நாள் அன்று வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) ஏற்படவுள்ளது.

அது என்ன வெள்ளி இடைமறிப்பு?

நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்களும் , அவற்றின் துணைக்கோள்களும், மற்றும் சில சிறிய கோள்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறன.

இந்த  நகர்வின் போது அபூர்வமாக மூன்று கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருவதுண்டு. அப்படி வரும் போது, இடையில் உள்ள பொருள் மற்றதை மறைக்கும். இதற்கு இடைமறிப்பு (Astronomical Transit) என்று பெயர்.

வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.

[ஒரு கோளும், அதன் துணைக்கோளும் சூரியனும் ஒரே கோட்டில் வந்தால் அது கிரகணம் (Eclipse). அதுவே, இரு கிரகங்களும் சூரியனும் வந்தால் அது இடைமறிப்பு (Transit) ] 


அதில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?

வெள்ளியும், பூமியும் சூரியனைச் சுற்றி வர முறையே 224.7 மற்றும் 365.25 நாட்கள் எடுக்கிறன. வெள்ளியும், பூமியும் 584 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்கிறன.

 ஆனால், இரண்டின் பாதைகளும் சாய்வாக இருப்பதால், சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு--  243 ஆண்டுகளுக்கு நான்கு முறை மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடக்கிறது.



இந்த நான்கு நிகழ்வுகளும் கூட சீராக இருக்காது. 8 ஆண்டுகள் இடைவெளி கொண்ட இரட்டை நிகழ்வாய் நிகழும். அடுத்த இரட்டை நிகழ்வுகள் 105 1/2 ஆண்டுகள் கழித்து வரும்.

  தற்போதைய இடைமறிப்பு 2004 ஜூன் மற்றும் 2012 ஜூன் ஆகிய இரட்டைகளைக் கொண்டது.


எப்போது நடக்க உள்ளது?

இந்த நிகழ்வு உலக நேரத்தின் (GMT) படி 5 ஜூன் 22:10 க்குத் துவங்கி 6 ஜூன் 04:50 வரை நீடிக்கும்.

இந்திய நேரப்படி, ஜூன் ஆறாம் தேதி ( 6 June 2012) அதிகாலை 3:40 க்குத் துவங்கி காலை 10:20 வரை நீடிக்கும். இதைப் பார்க்க சூரியன் தேவை எனவே, அன்று சூரிய உதயம் (05:52) முதல் 10:20 வரை இந்தியாவில் பார்க்கலாம்.

பிற நாடுகளில் உள்ளவர்கள் தக்கவாறு நேரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

யார் எல்லாம் பார்க்கலாம்?

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்... தெரியும்!! (தேவைஎனில், சொடுக்கிப் பெரிதாகப் பாருங்கள்)

தெற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளில் சூரிய உதயம் துவங்கி பார்க்கலாம். அமெரிக்காவில் இடைமறிப்பை சூரிய மறைவு வரை பார்க்கலாம்.

சீனா, ஜப்பான் முதலிய கிழக்காசிய நாடுகளில் இடைமறிப்பை முழுவதுமாகக் காணலாம்! 
தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவில் இந்நிகழ்வைக் காண முடியாது!!


எப்படி பார்ப்பது?

இதுவும் சூரிய கிரகணத்தைப் போலத் தான்.  என்றாலும், வெள்ளி கிரகம் தொலைவில் உள்ளதால், சூரியனில் ஒரு புள்ளி போலத் தான் தெரியும்!!
 2004 இல் நிகழ்ந்த இடைமறிப்பின் படங்கள்:





தொலைநோக்கியின் (telescope) மூலமாகவோ, அல்லது பிம்பத்தைத் திரையில் பெரிதுபடுத்தியோ காணலாம்..அல்லது சூரிய கண்ணாடிகள் அணிந்தும் பார்க்கலாம்!!
யாரும் வெறும் கண்ணால் பார்க்க முயற்சி செய்யாதீர்கள். 

இப்போதே தேவையானவற்றை வாங்கி வையுங்கள்!!

இதைத் தவற விட்டால்......?

இந்த அரிய நிகழ்வைத் தவற விடுபவர்கள் மனம் தளர வேண்டாம். Stellarium போன்ற மென்பொருட்களின் உதவியால் கண்டு களிக்கலாம்.

நேரில் காண விரும்புபவர்களுக்கும் பிரச்சனை இல்லை. வெறும் 105 1/2 ஆண்டுகள் காத்திருந்தால் போதும்.. மீண்டும் இதனைக் காணலாம்.  [2117 டிசம்பர் 10-11] 




கொசுறு:
இந்த நிகழ்வை 1639 இல் முதன்முறையாக கண்டதாக ஐரோப்பிய ஏடுகளில் சான்று உள்ளது. பண்டைய இந்திய சோதிட ஏடுகளில் இதைப் பற்றிய சில குறிப்புகள் இருந்தாலும், கண்டதாக சான்று இல்லை.

நன்றி: விக்கிபீடியா, கூகிள் (செய்தி மற்றும் படங்கள்)

அவிழ்மடல்

முழுசா படிங்க

வெள்ளி, 1 ஜூன், 2012

ஜூன் 2012 ஸ்பெ ஷல் (நம்பாதீங்க- பகுதி 10) June Special

வணக்கம் நண்பர்களே,

திருமண தேவதையான ஜூனோவின் பெயர் கொண்ட இந்த ஜூன் மாதத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜூன் 2012 ஐப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு.. தெரியுமா?

ஒரே மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு வந்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு அரிய சிறப்பைப் பெற்றது ஜூன் 2012 !! சந்தேகம் என்றால் நீங்களே காலண்டரைப் பாருங்க!


இந்த அரிய நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் !


என்னங்க? நிச்சயமா இது ஜூன் ஸ்பெ ஷல் தானே?

கொஞ்சம் இருங்க!!மேலே இருப்பது சுத்த அக்மார்க் பொய்!!


உண்மை:

இந்த செய்தியை மின்னஞ்சலில் பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியாது!!


முதலில், ஜூன் மாதத்தில் 30 நாட்கள் தான். இது நடக்க சாத்தியம் இல்லை. 

மே மாதம் பார்க்க:


அடுத்து, இந்த நிகழ்விற்காக (5 வெள்ளி, சனி, ஞாயிறு) 823 வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை.. மார்ச் 2013 வரை காத்திருந்தால் போதும்!!


அப்படியென்றால் மார்ச் 2013 இல் வரும் நிகழ்வு (5 வெள்ளி, சனி, ஞாயிறு) அபூர்வமானதா? அதுவும் கிடையாது!! 

இதற்கு முன்பு 5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த மாதங்கள்: ஜனவரி 2010, அக்டோபர் 2010, சூலை 2011

அடுத்த வரவு:  மார்ச் 2013, ஆகஸ்ட் 2014

ஏப்ரலில் பண்ணவேண்டியதை யாரோ ஜூனில் பண்ணிட்டாங்க.. ஃபிரீயா விடுங்க!!


28 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலண்டர் மீண்டும் திரும்பிவருவது குறிப்பிடத்தக்கது..

ஒரு மாதத்தில் 3 நாட்கள் ஐந்து முறை வர அந்த மாதத்தில் 31 நாட்கள் இருக்க வேண்டும்.  மேலும், அந்த வாரத்தின் முதல் நாள் தான் அந்த 5 வது வாரத்தின் அடித்தளம்.

அதாவது, 5 வெள்ளி, சனி, ஞாயிறு வர அந்த மாதத்தின் முதல் நாள் வெள்ளியாக இருக்க வேண்டும் !

படங்கள் நன்றி: கூகிள்

பின் குறிப்பு:
சொன்னாலும், சொல்லாவிட்டாலும்,  இந்த ஜூன் 2012 ஒரு முக்கியமான மாதம் தான். இந்த மாதத்தில் நிகழும் ஒரு மிக முக்கியமான காட்சியை நீங்கள் தவற விட்டால், அதை மீண்டும் காண நீங்கள் குறைந்தபட்சம் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அது என்ன நிகழ்வு? அதைப் பற்றி அடுத்த பதிவில்!!!


நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்


அவிழ்மடல்

முழுசா படிங்க

ஞாயிறு, 27 மே, 2012

படை எடுக்காத ஒரே நாடு (நம்பாதீங்க - பகுதி 9 )

நமது இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த பரப்பபடுகிறது:
இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை
 இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

உண்மை


பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின் மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்)..

மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்:
  • இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன்
  • 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து கைப்பற்றினான்.
ராஜேந்திர சோழன் ஆட்சிபரப்பு

இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர்களுக்கு:

1961 ஆம் ஆண்டு நடந்த கோவா இணைப்பை (Annexation of Goa - 1961) ஒரு படையெடுப்பே.

"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!! அந்த போருக்குப் பிறகு காலனியாக்க அடிமைத்தனத்தில் இருந்து அந்த பகுதிகள் விடுதலைப் பெற்றன என்பது உண்மை தான்.

"Liberation of Goa" என்று நாம் சொன்னாலும், அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தமையால்,  அது ஒரு படையெடுப்பே!!!

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்

அவிழ்மடல்

முழுசா படிங்க

வியாழன், 24 மே, 2012

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்.. 

" ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?"

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!"

"தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?"

எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!!
பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்...
அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!!


இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!!

**************


2004 ஆம் ஆண்டு..
 
பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி.


"பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்" 


"நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கிறோம்" 


அடுத்த பொதிகை நிகழ்ச்சியிலேயே, மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என்று அருமையாக விளக்கினார்கள்.


அன்று மின்னஞ்சல் உருவாக்க வழி கேட்டவர் இன்று கணிணித் துறையில் பெரிய புலியாக இருக்கிறார்.   பலருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் கணிணி மெம்பொருட்களைப் பற்றி தனது தளத்தில் விளக்கி வருகிறார். திறமூல சமூகத்திலும் ஆர்வம் கொண்டு இருக்கிறார்.

அவர் வேறுயாருமல்ல... நமது "தமிழ் CPU " ந.ர.செ.ராஜ்குமார்! 

****************
இப்ப இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்!!


2003 ஆம் ஆண்டு

"ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  கவனமா கேட்டுக்க!!!"
இத நான் சொல்லலீங்க..  எங்க பக்கத்து வீட்டு  அக்கா சொன்னாங்க..
அவங்க அப்பவே MBA முடிச்சு ஒரு பேங்க்ல வேலை செய்துகிட்டு இருந்தாங்க!
 
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னால்,  மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேர்த்து விடும் முயற்சியில்  தீவிரமாக இருந்தார் என் அப்பா.

அப்போது தான் முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைய விண்ணப்பங்கள் (Online Application) வந்த நேரம். அதில் விண்ணப்பிக்க கட்டாயம் மின்னஞ்சல் முகவரி வேண்டும். அப்படித் தான் எனக்கு மின்னஞ்சல் முகவரிக்கான தேவை ஏற்பட்டது.

அப்போது தான் நான் அக்காவின் உதவியை நாடினேன். அவர் பொறுமையாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும் முறையினைச் செயல் வடிவத்தில் காட்டினார். அந்த செயலாக்கத்திலேயே எனது முதல் மின்னஞ்சல் முகவரியும் உருவானது. (அப்போது யாஹூ தான் பிரபலம் எனவே, அதில் தான் உருவானது)


"தம்பி.. ஈமெயில் ஐடி கிரியேட் பண்றது முக்கியமில்ல. பாஸ்வேர்ட மறக்காம வெச்சுக்கணும்" என்றார். நானும் சரி என்பது போல் தலையாட்டினேன்.

அதன் பிறகு, நான் இணையத்தில் விண்ணப்பிக்காமல் நேரடியாக விண்ணப்பித்தது வேறு விசயம்!
*********

சில மாதங்கள் கழித்து..

கல்லூரியில் சேர்ந்தாயிற்று. மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பிரவுசிங் சென்டர் போனோம்.


"யோவ் ஆளுங்க.. நீ மெயில் எல்லாம் செக் பண்ண மாட்டியா?"
"இதுவரைக்கும் பண்ணதில்ல"

"அடிக்கடி செக் பண்ணிப் பார்க்கணும் மச்சான்!! சரி, உன் மெயில் ஐடி, பாஸ்வேர்ட்  சொல்லு"
"பாஸ்வேர்ட் யாருக்கும் சொல்ல மாட்டேன்.. வேண்டும்னா நானே அடிக்கிறேன்"


"சரி..போ!! உன் மெயில் ஐடி சொல்லு"

"அப்படின்னா??"


அவிழ்மடல்

முழுசா படிங்க

ஞாயிறு, 20 மே, 2012

கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் (நம்பாதீங்க - பகுதி 8 )

புராணக்கதைகளில் ராட்சதர்கள் பற்றிய கதைகளைப் படித்திருப்போம். அவர்கள் மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள் அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட ராட்சதன் தான்..

அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா?

இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!

                                                                                                                       
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோத்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?

கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு  (National Geographic Channel) நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.
















இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் (Natgeo)ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.



இந்த செய்தி Times of India நாளிதழின் 22 ஏப்ரல் 2004 மும்பை பதிப்பிலும் வெளியானதாம். (தேடினால் கிடைக்கவில்லை)

செய்தி வெளியீடு:
Ghatotkach Skeleton : Mahabhart Bhima's son Found
Archeologists discover remains of a huge human skeleton


இந்த செய்தி தமிழிலும் வெளியாகியுள்ளது:
கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் அதிர்ச்சிப் புகைப்படங்களுடன்


என்னங்க? ஆச்சரியமாக இருக்கா??

ஆனால்.............
 இதெல்லாம் டூப்பு!! போட்டோசாப் தான் டாப்பு!!

உண்மை

பண்டைய காலத்தில் "Mastodon" என்கிற பெரிய யானைகள் (நாம் Mammoth என்று படித்து இருப்போம்!) இருந்தன. அவற்றின் எச்சங்களை (எலும்புகள்) வானில் இருந்து  2000 ஆம் ஆண்டில் எடுத்திருக்கிறார்கள்.



இந்த படத்தைக் கண்டார் கனடாவின் அயர்ன் கைட் (Iron Kite) என்பவர். அதில் யானைக்குப் பதில் மனிதனின் எலும்புகளை மாற்றி Archaeological Anomalies 2 என்கிற புகைப்பட போட்டிக்கு (2003 இல்) அனுப்பி வைத்தார். படம் அந்த போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது.

அந்த படத்தைப் பார்த்த யாரோ செய்த திருவிளையாடல் தான் இது!!


சரி, முதல் படம் சரி.. மற்றவை??

இரண்டாம் படம் - உருவாக்கியவர்: அனாகின் (Anakinnnn)
மூன்றாம் படம் - உருவாக்கியவர்: அமரன்டோ (Amaranto )
[சடலத்தின் கையில் துப்பாக்கி உள்ளதைக் கவனிக்கவும்]

மூன்று படங்களும் Worth1000 என்கிற தளம் 2003-இல் நடத்திய  Archaeological Anomalies 2 என்கிற போட்டிக்கு அனுப்பப்பட்ட பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில் கடோத்கஜனாக இருக்கும் இந்த ராட்சத எலும்பு ஒவ்வொரு நாட்டிலும் (கிரேக்கம், மலேசியா, போர்த்துகல், எகிப்து, கென்யா, தென்னாப்பிரிக்கா) அந்த ஊரின் ராட்சதரின் பெயரில் உலாவுகிறது!!!
 
எனவே, இது ஒரு பொய் படம் என்று நேசனல் ஜியாகரபி (National Geography) விளக்கம் கொடுத்துள்ளது:  "Skeleton of Giant" Is Internet Photo Hoax

IronKite அந்த படத்தை உருவாக்க 2 மணி நேரம் தான் பிடித்ததாம்.  ஆனால், இந்த படம் ராட்சதர்களைக் கண்டுபிடித்ததாக 9 வருடங்களாக வலம் வருகிறது.!!



நன்றி: பத்மாசீனிவாஸ், ஹோக்ஸ்லேயர்

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்




அவிழ்மடல்

முழுசா படிங்க

ஞாயிறு, 13 மே, 2012

அணுத் தமிழ்

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
 வழுவல கால வகையினானே”          
                                                     - நன்னூல்


மொழிகளின் தொன்மைக்குச் சான்றே அவற்றின் பழம்பெரும் இலக்கியங்ளே. எனவே, அவற்றிற்கு "பழையன கழிதல்" என்பது பொருந்தா. ஆனால், மொழிகளின் உய்விற்கு புதியன புகுதல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

பண்டைய மொழிகளின் தற்கால நிலை:

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே அறியப்பெற்றிருந்த காலங்களில் உலகில் கோலோச்சிய பண்டைய மொழிகள் ஆறு என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறனர்.
அவை தமிழ், சமஸ்கிருதம், சீனம், கிரேக்கம், இலத்தீன் மற்றும் எபிரேயம் (ஹீப்ரு) ஆகியன.
 
இவற்றில், இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன. கிரேக்கமும், ஹீப்ருவும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது மீண்டிருக்கிறன. சீனமோ தன்னைப் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டது. பல்வேறு படையெடுப்புகளையும் தாங்கி, பிற மொழிக் கலவைகளாலும் பாதிப்புறாமல் இன்றும் தழைத்தோங்கும் மொழி தமிழ் ஒன்று தான்.
முற்காலங்களில் தமிழ்:
சங்கக்காலத்தில் தமிழ் மொழி மூன்று வகைகளின் மூலம் செழித்தோங்கியது. அவை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய பெயர்களில் வளர்ந்தது. உலகிலேயே மிகவும் தொன்மையான இலக்கன நூலான "தொல்காப்பியம்" தமிழ் மொழி அன்றே ஒரு முழு வடிவம் பெற்றிந்தமைக்குச் சான்றாக விளங்குகிறது.
அதன் பின், பாமரரும் படித்து புரிந்து கொள்வதற்கு என "உரைநடைத் தமிழ்" வந்தது. வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் உருவான பின், தமிழ் மொழி அவற்றின் மூலமாகவும் மக்களை அடைய முனைந்தது.

அணுத்தமிழ்:
ஆங்கிலேயர்கள் உலகை ஆண்ட போது, உலகெங்கும் ஆங்கில மொழி புகுந்தது. அதன் விளைவாக, பெரும்பாலான ஊடகங்களிலும் ஆங்கிலமே பிரதான மொழியாக மாறியது.
இன்றைய காலத்தில், மொழியின் வளர்ச்சிக்கு அது எல்லா ஊடகங்களிலும் பரப்ப வல்லதாக இருத்தல் வேண்டும். இதை உணர்ந்த சில தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் தான் இன்று உலகெங்கும் அணுத்தமிழ் உதித்து வளர்ந்து வருகிறது.

கணிணித் தமிழ்:
அணுத் தமிழ் வளர்ச்சியின் முதல் படியே கணிணியில் தான் துவங்கியது. விண்டோஸ் இயங்கு தளம் உருவாகும் முன்னரே, கணிணித் தமிழ் பயன்பாட்டில் இருந்தது.
மக்கள் மத்தியில் விண்டோஸ் உருவான பிறகே கணிணி பிரபலமாகத் துவங்கியது. விண்டோஸ் அறிமுகப்படுத்த போது, ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மக்களின் அறியாமை காரணமாக இடையில், கணிணித் தமிழ் பெரிதாய் வளர்ச்சியின்றி முடங்கியிருந்தது. எனவே, தமிழ் மொழி பெரும்பாலும் தட்டச்சு செய்வதற்கு மட்டுமே கணிணியில் உலா வந்தது.

இப்போது மீண்டும் தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்தால், கணிணித் தமிழ் மறு எழுச்சி பெற்றுள்ளது. பலரின் அயராத முயற்சியால், இன்று கணிணி தமிழ் பேசுகிறது.

தமிழ் பேசும் இயங்குதளங்கள்:
லினக்ஸ் என்று சொல்லப்படும் கட்டற்ற திறமூல இயங்குதளங்கள் பலவும் இன்று தமிழ் பேசும் திறன் பெற்று விட்டன. விண்டோஸ் பதிப்பு தமிழில் கிடைக்கிறது என்றாலும், அதனைஅறிந்தவர்கள் மிகவும் குறைவு.
உபுண்டு இயங்குதளத்தில் தமிழ் பதிப்பு உள்ளது. மேலும், விரும்பினால், நிறுவல் மொழியையே தமிழாக வைக்க வகை செய்கிறது 
 


தமிழில் பயன்பாடுகள்:

பெரும்பாலான பயன்பாடுகள் தமிழில் உள்ளன. தமிழில் பயன்பாடு கிடைக்கும் போது ஆங்கிலத்தில் ஏன் பயன்படுத்த வேண்டும்?




உலாவிகளில் தமிழ்:
நெருப்பு நரி என்றழைக்கப்படும் பயர்பாக்ஸ் உலாவி தான் முதன்முதலில் தமிழை இணையத்தில் அறிமுகம் செய்தது. அதன் பிறகு, குரோம், எபிக், ஓபரா முதலிய உலாவிகள் தமிழில் பேசத் துவங்கின.
இணையத் தமிழ்:
பல காலமாக இணையத்தமிழ் இருந்தாலும், இணையத்தமிழ் வலைப்பூக்களின் அறிமுகத்திற்குப் பின் மிகவும் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியது. இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கிய பலரும் வலைப்பூ துவங்கி தங்கள் எண்ணங்களையும், திறமைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இப்படி எழுதத் துவங்கிய பலரும் பிறர் எழுதிய படைப்புகளையும் படித்து மகிழ இணையத்தமிழ் அசுர வளர்ச்சி அடைந்தது.
பதிவர்கள் பெருகியதால், பதிவர்கள் அனைவரும் தங்கள் பதிவுகளைத் தொகுக்க இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ், வலைச்சரம் போன்ற பல திரட்டிகள் துவங்கப்பட்டன. திரட்டிகளின் வரவால் பதிவுகளின் தரம் மேலும் மேம்பட்டதோடு, பதிவுகள் மேலும் பலரைச் சென்றடைந்தது
 
விக்கிபீடியா தனது தளத்தின் தமிழ் பதிப்பை வெளியிட்டதும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். இன்று பல தமிழ் பதிவுகள் உலகெங்கும் வலம் வருகிறன.


அலைத்தமிழ்:
இன்று பல அலைபேசிகளில் தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் வழிவகைகள் உள்ளன. நோக்கியாவின் பல அடிப்படை மாதிரிகளில் தமிழையே இயங்கு மொழியாக மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. (பிற மாதிரிகளில் காணோம்!!). 
 
விலையுயர்ந்த பல அலைபேசிகளில் தமிழில் எழுதும் வசதிகளும் இருக்கிறன. தமிழ் மொழி ஆதரவு இல்லாத பல பேசிகளிலும் அவற்றைச் செயலாக்குவதற்கென்றே இணைய இணைப்புகள் உள்ளன.

பணத்தமிழ்:
இன்று பல தானியக்க வங்கி இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுடன் தமிழில் பணமாற்றம் செய்கிறன. ஆங்கிலம் அறியாதவரும் பயன்படுத்தும் வகையில், தானியக்க வங்கி இயந்திரங்களும் தமிழ் பேசுவது அணுத்தமிழ் வளர்ச்சிக்கு சான்றாக விளங்குகிறது.

வளரும் அணுத்தமிழ்:

இன்று மிண்ணணு சாதனங்கள் பலவற்றிலும் அணுத்தமிழ் புகுந்திருப்பதற்கு அதற்காக அயராது உழைத்தவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். Launchpad என்கிற தளம் மூலம், தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து பல கணிணி மற்றும் இணைய பயன்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டே இருக்கிறனர்.

வளர்ச்சியும் முட்டுக்கட்டைகளும்:
அணுத்தமிழ் வளர்ச்சி அபரிதமாக இருந்தாலும், அதனைப் பயன்படுத்துபவர்கள் குறைவு என்பது வேதனை அடைய வைக்கிறது.
அறியாமையின் காரணமாக சிலரும், வறட்டு கெளரவம் காரணமாக பலரும், ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி பழகியமையால் இலகுவின் காரணமாக பலரும் அணுத்தமிழைப் புறக்கணிக்கிறனர்.
தமிழ் மொழி திரையில் இருந்தாலும், ஆங்கிலத்தையே பலரும் தெரிவு செய்வது வேதனைக்குரியது. இதில் தமிழுக்காக அறைகூவல் விடுபவர்களும் அடக்கம்.

முடிவுரை:

மொழியின் வளர்ச்சி மொழியினைப் பேசுபவர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முடிந்தவரை தமிழ் மொழியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவோம். தமிழை வளர்ப்போம்.
...................................................................
மேலே உள்ள படங்களில் தமிழ், அலைபேசி, தானியக்க வங்கி இயந்திரம் தவிர மற்ற அனைத்தும் என் கணிணியிலேயே தமிழைப் பயன்படுத்தி படம் பிடிக்கப்பட்டன. இதுவே அணுத் தமிழ் வளர்ச்சிக்கு சிறந்த சான்று!!

தமிழ்தோட்டத்தின் இலக்கிய போட்டி- 2011 இல் கட்டுரைப் போட்டிக்கான பரிசை வென்ற கட்டுரை இது


முழுசா படிங்க

வெள்ளி, 11 மே, 2012

உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு?

'உபுண்டு' என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு? உபுண்டு ஒரு  இயங்குதளம் ஆகும் (Operating System). விண்டோஸ் இயங்குதளம் போல அல்லாமல், இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும் (Open Source software). இதனைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் கட்டவோ, தவறாக நகலெடுக்கவோ தேவையில்லை. இலவசமாக பயன்படுத்தலாம்!!! 
இலவசம் என்றால், ஏதாவது குறை இருக்குமோ? பயன்படுத்திப் பாருங்க!! விண்டோஸ் இயங்குதளத்தை விட இது எவ்வளவு மேல் என்பதை நீங்களே உணர்வீர்கள்!! இனி கட்டுரை

 ..........................................................................................................................................
உபுண்டு 12.04 தோ வெளிவந்து விட்டது. வழக்கமாக வெளிவரும் வழு நீக்கல்கள் (Bug Fixes) மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் தவிர, உபுண்டுவில் வேறு என்ன மாற்றங்கள் ? இங்கு பார்ப்போம்!!!!

 
உபுண்டுவின் யூனிட்டி பணிமேடை சூழல் (Unity Desktop Environment) நன்கு மெருகூட்டப்பட்டிருக்கிறது. அதில் பல புதிய அம்சங்களும், அமைப்பு வடிவமைப்புகளும் (Configurations) இடம் பெற்றுள்ளன





உபுண்டுவின் புதிய பதிப்பான Precise Pangolin மாபெரும் அதிரடி மாற்றங்கள் எதனையும் கொண்டு வரவில்லை. ஆனால், யூனிட்டியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதுடன் நல்ல மெருகேறிய மற்றும் திருத்தமான ஒரு இடைமுகத்தை நமக்கு வழங்குகிறது.
நீண்ட கால சேவையாக (Long Term Service-LTS) வெளிவந்துள்ள இந்த பதிப்பிற்கு பொது கணிணிகளில் (Desktop) மூன்று ஆண்டுகளுக்கும், வழங்கி வகை கணிணிகளில் (Server) ஐந்து ஆண்டுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும்.

வான்கல கருவிப்பலகை காட்சியமைவு [HUD]
உபுண்டுவின் புதிய வான்கல கருவிப்பலகை காட்சியமைவு (Heads-Up Display) தான் Precise Pangolin பதிப்பில் நமது கவனத்தை ஈர்க்கும் புதிய அம்சம் ஆகும். யூனிட்டி என்னும் திகைப்பு புதிரை (Jigsaw Puzzle) முடிக்க  மிகத்தேவையான துண்டு இதுவே! உபுண்டுவின் உலகளாவிய பட்டிப் பலகையினையும் (Global menu bar) , தானே மறையும் பட்டிகளையும் பயன்படுத்த இப்போது தான் ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது.
HUD எனப்படுவது உபுண்டுவின் பல நாள் நோக்கமான  "சொல் தள  இடைமுகம்" (text-based interface) ஆகும். இது வழக்கமான வரைபட மெனுப் பட்டிக்கு மாற்றான ஒரு முயற்சி.

அப்படியென்றால், வழக்கமான மெனுப்பட்டி என்ன ஆகும்? யாரும் பயப்பட வேண்டாம் !! - மெனுப்பட்டி எப்போதும் அங்கேயே இருக்கும். உபுண்டுவின் உலகளாவிய பட்டிப் பலகையினை ஆதரிக்கும் எல்லா பயன்பாடுகளும் HUD ஐ ஆதரிக்கும்.
HUD ஐச் செயல்படுத்த எந்த பயன்பாட்டிலும், Alt விசையினை அழுத்தவும். அழுத்திய பின், நீங்கள் தட்டச்சு செய்ய செய்ய அதனுடன் ஒத்துப் போகும் பட்டி பொருட்களைக் (menu items) காணலாம். இந்த வசதியினைப் பணிமேடையிலும் பெறலாம்.

மெனு பொருளைச் சுட்டி மூலமாகவும், நிலைக்காட்டி விசைகள் மற்றும் Enter விசை மூலமாகவும் தேர்ந்தெடுப்பதிற்கும், HUD மூலம் தேர்ந்தெடுப்பதிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட வசதி எந்த பட்டியில் உள்ளது என்று தெரியாமல் தேடும் தொல்லையை HUD போக்குகிறது.


தனியுரிமை  

உபுண்டு 11.04 பதிப்பில் இருந்து Zeitgeist பொறி (Zeitgeist engine) உபுண்டுவின் அங்கமாக ஒருங்கிணைக்கப்பட்டது. Zeitgeist பொறியினை ஒரு செயல் பதிவேடு (Activity Log) என்றும் சொல்லலாம். நான் கணிணியில் செய்யும் எல்லா செயல்களையும் - திறக்கும் கோப்புகள், பார்க்கும் வலைத்தளங்கள், இணையத்தில் பேசும் மக்கள், மேலும் பல- ஒரு பதிவில் சேமித்து வைக்கிறது. பதிவுகள் கணிணியிலேயே சேமிக்கப்பட்டு, நமது விருப்பத்திற்கேற்ற சூழலை அளிப்பதற்காக, பிற பணிமேடை பயன்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
இதனால் நமது தனியுரிமை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது அல்லவா!! 

பலரது தனியுரிமை கவலைகளைக் கவனத்தில் கொண்ட உபுண்டு, தற்போது இதைக் கையாள புதிதாய் "தனியுரிமை பலகம்" (Privacy Panel) ஒன்றை உருவாக்கியுள்ளது. உபுண்டு கணிணி அமைப்புகள் பக்கத்தில் (System Settings--> Privacy) இதனை நீங்கள் காணலாம்



தனியுரிமை பலகத்தில் இதற்காக சில தெரிவுகள் (Options) உள்ளன. நமது செயல்கள் பதிவதை முழுதும் தடை செய்வதற்கு மட்டுமன்றி குறிப்பிட்ட வகை கோப்பு, அடைவுகள் அல்லது பயன்பாடுகளுக்கும் பதிவு தடை வசதி உள்ளது. மேலும், செயல் வரலாற்றினை முழுதாகவோ, குறிப்பிட்ட கால அளவிற்கோ அழித்து விடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது



 யூனிட்டி தோற்ற அமைப்புகள்

உபுண்டுவில் ஒரு வழியாக யூனிட்டி சூழலுக்கான சில அமைப்பு வடிவமைப்புகள் கிடைக்கிறன. இந்த தெரிவுகளைக் கணிணி அமைப்புகள் பக்கத்தில் உள்ள 'தோற்றம்' பலகத்தில் (System Settings --> Appearance) காணலாம். [பணிமேடையில் Right-Click செய்தும் பெறலாம்]

'Look' தத்தலின் மூலம் யூனிட்டி ஏவுதளத்தில் (Unity Launcher) இடம்பெற்றுள்ள பயன்பாட்டு குறிப்படங்களின் (icon) அளவினை மாற்றலாம்- அவற்றை உங்கள் விருப்பபடி பெரிதாக்கவோ, சிறிதாகவோ ஆக்கலாம்.
 
"Behaviour' தத்தலின் மூலம் ஏவுதளத்தின் மறைவியல்புத் தன்மையை மாற்றலாம். தற்போதய பதிப்பில் உள்ள ஏவுதளம் இயல்பாக தானாக மறையும் வகையில் அமைக்கப்படவில்லை. அதன் மறைவியல்புத் தன்மையை 'auto-hide' அம்சத்தைச் செயல்படுத்துவதன் மூலம் உயிரூட்டலாம். மேலும், அதன் உணர்திறனையும் விருப்பப்படி மாற்றலாம்



 தற்போது சில தெரிவுகளே யூனிட்டியில் காணக் கிடைக்கிறன. பின்னாட்களில் மேலும் சில வசதிகள் கிடைக்கும் என்று நம்புவோம்!

விரைவுப் பட்டியல்கள் (Quicklists)

யூனிட்டியின் விரைவுப் பட்டியல் அம்சத்தைத் தற்போது பல பயன்பாடுகள் ஆதரிக்கிறன. அவற்றுள் நாட்டிலஸ் கோப்பு மேலாளரும் ( Nautilus file manager), ரிதம்பாக்ஸ் இசைப்பானும் (Rhythmbox music player) அடக்கம். யூனிட்டி ஏவுதளத்தில் உள்ள பயன்பாட்டினை Right-click செய்தால், அதில் அதிகம் பயன்படும் தெரிவுகளுக்கான குறுக்கு இணைப்புகள் இருக்கும்

 

உதாரணமாக, Nautilus புக்மார்க் செய்யப்பட்ட இடங்களையும், Rythmbox  மீட்பொலிக்கும் தெரிவுகளையும் (playback options) காட்டும்.
 
காணொளி வில்லை (Video Lens)
Lens (வில்லைகள்) மூலம் பலவகைப்பட்ட தேடல்களையும் Unity Dash திரையிலேயே செய்யலாம். Precise Pangolin காணொளி தேடலிற்காக புதிய வில்லை ஒன்றை உருவாக்கியுள்ளது
  

 Unity Dash திரையில் கீழே உள்ள காணொளி குறிப்படத்தைத் சொடுக்கிய பின் தேடினால், கணிணியில் சேமிக்கப்பட்ட காணொளிகள் மட்டும் அல்லாது, இணையத்தில் ( YouTube, Vimeo, TED Talks) உள்ள காணொளிகளையும் காணலாம். வடிப்பான்களின் துணை கொண்டு குறிப்பிட்ட இடத்தில் உள்ள காணொளிகளை மட்டும் பெறலாம்.

மென்பொருள் பரிந்துரைகள் (Software Recommendations)

உபுண்டு தற்போது தனித்துவமான மென்பொருள் பரிந்துரைகளை அளிக்கிறது. இந்த வசதியினைப் பெற நீங்கள் உங்கள் உபுண்டு மென்பொருள் மையத்தின் கணக்கின் Ubuntu Software Center account ) மூலம் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கென தனியே ஒரு கணக்குத் துவங்கத் தேவையில்லை. உங்கள் Ubuntu One கணக்கு அல்லது Launchpad கணக்கு போதும். உபுண்டு மென்பொருள் மையத்தின் கீழே உள்ள " Turn On Recommendations” பொத்தான் மூலம் இந்த வசதியினைப் பெறலாம்.



 பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களின் பட்டியல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை கனோனிக்கல் வழங்கிகளுக்கு ( Canonical’s servers) அனுப்பப்படும். பரிந்துரைகள் உபுண்டு மென்பொருள் மையத்தில் தோன்றும்





இயல்பு நிறுவல்களில் இனியும் Mono பயன்பாடு கிடையாது (No Mono By Default)

உபுண்டு 12.04 பான்ஷீ (Banshee ) இசைப்பானைத் தனது இயல்பு நிறுவல்களில் இருந்து நீக்கிவிட்டது. மீண்டும் ரிதம் பாக்ஸ் ( Rhythmbox) உபுண்டுவின் இசைப்பான் ஆனது. உபுண்டுவின் இயல்பிருப்பில் இருந்த மற்றொரு Mono பயன்பாடான டாம்பாயும் (Tomboy) இயல்பு நிறுவல்களில் இருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம், உபுண்டுவின் இயல்பு நிறுவல்களில் இனியும் Mono பயன்பாடுகளுக்கு இடம் இல்லை.

 


எனினும், மேற்கூறிய இரண்டு பயன்பாடுகளும் உபுண்டு மென்பொருள் மையத்தில் இடம்பெற்றுள்ளன. தேவையெனில், நிறுவிக்கொள்ளலாம். உபுண்டு மென்பொருள் மையத்தில் பெடோரா (Fedora) இயங்குதளத்தின் இயல்பு நிறுவலும், டாம்பாயின் C++ வழியுமான Gnote பயன்பாடும் இடம்பெற்றுள்ளது.


உபுண்டு ஒன் மறுவடிவமைப்பு (Ubuntu One Redesign)



உபுண்டுவின் மேகச் சேமிப்பு சேவையான Ubuntu One, தனது Precise Pangolin பதிப்பிற்கான இடைமுகத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது. பலரையும் ஈர்க்கும் விதமாக, புதிய இடைமுகம் அமைந்துள்ளது. புதிய இடைமுகம் GTK+ கருவித்தொகுதியினைக் ( GTK+ toolkit) கொண்ட பழைய இடைமுகத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.


புதிய இடைமுகம் KDE சூழல்களில் பயன்படுத்தப்படும் QT கருவித்தொகுதி ( QT toolkit) மூலம் இயங்குகிறது. உபுண்டுவின் எல்லா பணிமேடை சூழல்களிலும் ( GNOME, Unity உட்பட) புதிய இடைமுகம் இடம்பெற்றுள்ளது.


நன்றி: How to Geek, தமிழ் விக்சனரி (கலைச்சொற்கள்)
 ...................................................................

இந்த கட்டுரை  '8 New Features in Ubuntu 12.04, Precise Pangolin' என்கிற கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். 
எனது மொழிபெயர்ப்பு கட்டுரையை வெளியிட்ட கணியம் இதழுக்கு கோடானு கோடி நன்றிகள்!!


இதழைப் படித்து மகிழுங்கள்: கணியம்- இதழ் 5
மேலும் தகவல்களுக்கு இங்கே பாருங்கள்

அவிழ்மடல்

முழுசா படிங்க